Thursday 28 March 2013

என்னங்க தப்பு?


பாவம், என்ன பசியோ!...பிஸ்கட் தந்தவுடன் என்ன ஏது என்று கூடப் புரியாமல் உடனே வாயில் போட்டுக் கொள்கிற அப்பாவிக் குழந்தையை உடனடியாக சுட்டுத்தள்ளிய கொடுமையை நினைத்து நினைத்துக் கலங்கிக் கொண்டிருக்கிறோம் நாம். அந்த மிருகத்தனத்தை மேற்பார்வையிட்டு முடித்த கையோடு வெற்றிப் புன்னகையுடன் ‘தில்’லாக நம்ம கோயில்களுக்கு வந்து சாமி கும்பிடுகிறார் ராஜபக்ஷே. அவருக்கு பாதுகாப்போடு மாலை மரியாதை செய்து, தேங்காய், பிரசாதம் எல்லாம் கொடுத்தனுப்புகிறார் மன்மோகன் சிங். இந்த கண்றாவியையெல்லாம் கலங்கிய கண்களுடன் இயலாமையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

கேட்பாரில்லை!

‘எல்லாம் சரிதான்...அதுக்காக கிரிக்கெட்டையும் அரசியலையும் போட்டு ஏன் குழப்பிக்கிறீங்க? ஸ்ரீலங்கா பிளேயர்ஸ் சென்னையில் விளையாடக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிக்கிறது பக்குவமான செயலா தெரியலையே?’ என்று நமக்கு பாடம் எடுக்கிறார்கள்!

இவர்களுக்கு நாம் என்னத்தைச் சொல்ல?

மன்மோகன் சிங் அரசு தமிழர்களின் கொந்தளிக்கும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ராஜபக்ஷேவுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்திருந்தால், கொலை கூட்டத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த முனைந்திருந்தால், நாம் ஏன் கிரிக்கெட்டை கையில் எடுக்கப் போகிறோம்? என்னமோ கிரிக்கெட் வேறு, அரசியல் வேறு என்கிற அடிப்படை விஷயம் கூட தமிழனுக்குத் தெரியவில்லையே என்று யாரும் வகுப்பு எடுக்கத் தேவையில்லை.


ஸ்ரீலங்கா கிரிகெட் வீரர்களுக்கு நாம் சொல்வது இதைத்தான். ‘உங்க நாட்டுப் பெரிய மனுஷன் அப்பாவி ஜனங்கள கொன்னுப் போட்டு கொடுமை பண்ணான். அதுக்கான தண்டனைய அவன் அனுபவிச்சாச்சு, போவட்டும். அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? வாங்க தம்பிகளா! நம்ம ஊர்ல கிரிகெட் விளையாடுங்க. பாக்கறோம். ரசிக்கிறோம். உங்க எல்லாரையும் நமக்கு ரொம்ப பிடிக்கும், தெரியுமில்ல!’ என்று புன்னகையோடு தட்டிக் கொடுத்து வரவேற்கிற நிலையிலா எங்களை வைத்திருக்கிறீர்கள்? தமிழனுக்குத் தெரியாத விருந்தோம்பலா?

வேறு வழி தெரியாமல்தான் ‘இங்க வந்து ஆடாதீங்க, பாடாதீங்க, விளையாடாதீங்க’ என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பல விதங்களில் ஆட்சேபித்துக் கொண்டிருக்கிறோம்.

என்னங்க தப்பு?


1 comment:

  1. இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.

    தமிழர்களின் இந்த எதிர்ப்பை "பொலிட்டிக்கல் ரேசிசம்" என்றும் "ரீஜினல் சாவனிசம்" என்றும் விமர்சிக்கிறார்கள்.

    விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமாம், விளையாட்டில் அரசியலை கலக்க கூடாதாம் என்றெல்லாம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கி வேதம் ஓதும் இவர்கள் தான் பாக்கிஸ்தான் வீரர்களை ஐபிஎல் லில் சேர்க்காமலும் பாக்கிஸ்தானோடு பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமலும் தேசபக்தியை காண்பிப்பவர்கள்

    ReplyDelete