Monday 29 April 2013

‘டூப்’ பீச்?!


ரண்டு நாட்களுக்கு முன்பு மெரினாவுக்குச் சென்றேன். காந்தி சிலைக்கருகில் நின்று பார்த்தால், பீச்சே (அதாவது மணல் பரப்பு) கண்ணுக்கு தெரியவில்லை. அவ்வளவு கடைகள்! மூவாயிரத்துக்கும் அதிகம் என்கிறார்கள். இந்த எண்ணிக்கை மிக விரைவில் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பீச்சுக்குள் நாம் வளைந்து வளைந்து நடந்து செல்ல கடைக்காரர்களே ஒற்றையடிப் பாதை ஒன்றை ஏற்படுத்தித்தந்தால் பெரிய விஷயம்! அப்படியென்றால், மக்கள் காற்றாட எந்த இடத்திலும் உட்காரவே முடியாதா? ‘தகவல்’ தங்கவேலு என்கிற என் நண்பர் (நிருபர்!) என்னிடம் சொன்னார் – “கவலைப்படாதீர்கள். இந்த பிரச்சனையை தீர்க்க, செங்கல்பட்டுக்கருகே 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இன்னொரு மெரினா பீச்சை அரசு உருவாக்கும் திட்டம் ஒன்று இருக்கிறது. இதே போல ஒரு காந்தி சிலையை கூட வைக்கபோகிறார்கள். அங்கே மக்களுக்காக மட்டுமே மணல் ஒதுக்கப்படும். பீச்சுக்கு செல்கிறவர்கள் முதலில் நம்.1 பீச்சுக்கு சென்று பட்டாணி சுண்டல், மாங்காய், மிளகாய் பஜ்ஜி’யெல்லாம் வாங்கிக் கொண்டு, அங்கிருந்து, ஸ்பெஷலாக போகும் பறக்கும் ரெயில் வண்டிகளில் ஏறி, செங்கல்பட்டு பீச்சுக்குப் போக வசதி செய்து தரப்படும். ஆகவே, மக்கள் கவலைப் பட வேண்டாம்!”

Friday 26 April 2013

அடேங்கம்பானி!

அம்பானி வீடு (மொத்தமும்!)

முதன் முறையாக நம் நாட்டில் ஒரு மகா கோடீஸ்வரருக்கு உச்சக்கட்ட ‘Z’ பிரிவு பாதுகாப்பு தர மத்திய உள்துறை இலாகா ஏற்பாடு செய்திருக்கிறது! விரைவில் இது பெருமையான - status symbolஆக கருதப்பட்டு, மகா கோடீஸ்வரர்கள் எல்லோரும் இதே பாதுகாப்பை எதிர்பார்க்கலாம்! ஆக மொத்தத்தில் இந்திய ஏழை நாட்டுக்குள் ‘பணக்காரர்கள் நாடு’ என்கிற ஒன்று தனியாக உருவாகியிருப்பது புரிகிறது. இதையடுத்து அம்பானிகளுக்கு என்று தனி கொடி, தூதுவர், மற்றும் ஐ.நா’வில் கெளரவ அங்கத்தினர் பதவி...இதெல்லாம்தான் பாக்கி! ஸோ, விரைவில் பெரும் செல்வந்தர்கள், நம் நாட்டுத் தெருக்களில் அரசியல் தலைவர்களைப் போல ஜீப்புகள், பைலட் மோட்டார்சைக்கிள்கள் சூழ AK-47 ஏந்திய இருபதுக்கும் மேற்பட்ட கமாண்டோக்களுடன்தான் எங்கும் போவார்கள். ஜீப்புகளில் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகள் மட்டுமே இப்போதைக்கு இருக்காதென்று தெரிகிறது. ஆனால் இதெல்லாம் இலவசமாக தரப்படப்போவதில்லை. அம்பானி அதற்காக மாசம் 15 லட்சம் ரூபாய் அரசுக்கு தர வேண்டுமாம். அம்பானியின் மதிப்பு (!) இரண்டு லட்சம் கோடி ரூபாய். இந்த கணக்குபடி பார்த்தால், எனக்கும் ‘Z’ பாதுகாப்பு தரப்பட்டால் அதற்காக மாதந்தோறும் நான் எவ்வளவு அரசுக்கு தரவேண்டியிருக்கும்? 15 பைசா?!




Thursday 28 March 2013

என்னங்க தப்பு?


பாவம், என்ன பசியோ!...பிஸ்கட் தந்தவுடன் என்ன ஏது என்று கூடப் புரியாமல் உடனே வாயில் போட்டுக் கொள்கிற அப்பாவிக் குழந்தையை உடனடியாக சுட்டுத்தள்ளிய கொடுமையை நினைத்து நினைத்துக் கலங்கிக் கொண்டிருக்கிறோம் நாம். அந்த மிருகத்தனத்தை மேற்பார்வையிட்டு முடித்த கையோடு வெற்றிப் புன்னகையுடன் ‘தில்’லாக நம்ம கோயில்களுக்கு வந்து சாமி கும்பிடுகிறார் ராஜபக்ஷே. அவருக்கு பாதுகாப்போடு மாலை மரியாதை செய்து, தேங்காய், பிரசாதம் எல்லாம் கொடுத்தனுப்புகிறார் மன்மோகன் சிங். இந்த கண்றாவியையெல்லாம் கலங்கிய கண்களுடன் இயலாமையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

கேட்பாரில்லை!

‘எல்லாம் சரிதான்...அதுக்காக கிரிக்கெட்டையும் அரசியலையும் போட்டு ஏன் குழப்பிக்கிறீங்க? ஸ்ரீலங்கா பிளேயர்ஸ் சென்னையில் விளையாடக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிக்கிறது பக்குவமான செயலா தெரியலையே?’ என்று நமக்கு பாடம் எடுக்கிறார்கள்!

இவர்களுக்கு நாம் என்னத்தைச் சொல்ல?

மன்மோகன் சிங் அரசு தமிழர்களின் கொந்தளிக்கும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ராஜபக்ஷேவுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்திருந்தால், கொலை கூட்டத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த முனைந்திருந்தால், நாம் ஏன் கிரிக்கெட்டை கையில் எடுக்கப் போகிறோம்? என்னமோ கிரிக்கெட் வேறு, அரசியல் வேறு என்கிற அடிப்படை விஷயம் கூட தமிழனுக்குத் தெரியவில்லையே என்று யாரும் வகுப்பு எடுக்கத் தேவையில்லை.


ஸ்ரீலங்கா கிரிகெட் வீரர்களுக்கு நாம் சொல்வது இதைத்தான். ‘உங்க நாட்டுப் பெரிய மனுஷன் அப்பாவி ஜனங்கள கொன்னுப் போட்டு கொடுமை பண்ணான். அதுக்கான தண்டனைய அவன் அனுபவிச்சாச்சு, போவட்டும். அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? வாங்க தம்பிகளா! நம்ம ஊர்ல கிரிகெட் விளையாடுங்க. பாக்கறோம். ரசிக்கிறோம். உங்க எல்லாரையும் நமக்கு ரொம்ப பிடிக்கும், தெரியுமில்ல!’ என்று புன்னகையோடு தட்டிக் கொடுத்து வரவேற்கிற நிலையிலா எங்களை வைத்திருக்கிறீர்கள்? தமிழனுக்குத் தெரியாத விருந்தோம்பலா?

வேறு வழி தெரியாமல்தான் ‘இங்க வந்து ஆடாதீங்க, பாடாதீங்க, விளையாடாதீங்க’ என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பல விதங்களில் ஆட்சேபித்துக் கொண்டிருக்கிறோம்.

என்னங்க தப்பு?


Wednesday 27 March 2013

பரதே...சியர்ஸ்!







பாலாவின் ‘பரதேசி’ திரைப்படம் பற்றி பலதரப்பட்ட விமர்சனங்களும் அநேகமாக வெளிவந்து விட்ட நிலையில் (சற்றுத் தாமதமாக) படத்தைப் பார்த்து விட்டு நானும் ஒரு விமர்சனம் எழுத வேண்டியது அவசியம் தானா?!

‘இப்படி ஒவ்வொண்ணைப் பத்தியும் நீ ரொம்ம்ம்ப யோசித்துக் கொண்டிருந்தால் Facebook’ல் எதையும் உன்னால் ‘அப்டேட்’ செய்ய முடியாது!’ என்று நண்பர்கள் கடுப்பாக – இதோ ‘பரதேசி’!...

‘பரதேசி’யை தீவிரமாகத் தாக்குபவர்கள் நிறையவே உண்டு! அவர்களில் சிலர் ‘கதையே இல்லை!’ என்றார்கள், சிலர் ‘கிராமத்து மக்கள் சிரமப்பட்டார்கள் சரி, அதற்காக படம் முழுக்க இதையே காட்டணுமா?’ என்று சிடுசிடுத்தார்கள். இதனாலெல்லாம் ‘பிரெயின்வாஷ்’ ஆகாமல் நான் தியேட்டருக்குள் நுழைந்து படம் பார்த்ததே பெரிய விஷயம்தான்!

நண்பர் ஒருவர் ‘கடைசியிலாவது redeeming factor’ என்று எதையாவது காட்டியிருக்கலாம்...’ என்று படபடத்தார். அதாவது, மெல்லிய ஒளிக்கீற்றாகக்கூட நம்பிக்கை தரும் காட்சியோ முடிவோ இல்லையாம்.


இந்த ரீதியான வாதங்கள் எதிலும் ‘லாஜிக்’ இருப்பதாக எனக்குப் படவில்லை. விஷயம் என்னவென்றால் அந்தக் காலத்தில் படங்கள் முடிந்த கையோடு சுபம்...மங்களம் என்று கார்டு போடுவார்கள். அப்படி ‘பரதேசி’யில் போடமுடியாது!

சோகத்தில் இவர்களுக்கு என்னதான் பிரச்சனை?! புரியவில்லை. குறைந்தபட்சம் சோகங்களை நேர்கொண்டு பார்க்கும் துணிவு கூட இல்லாமல் இருந்தால் எப்படி? இப்படி இருப்பது ஒரு மோசமான ‘எஸ்கேபிஸம்’ இல்லையா?! சோகம்தான் கனிவை, compassion பிறக்கச் செய்து நம் ஞானக்கண்ணைத் திறக்கிறது! ‘There are tears in things’...என்றார் பண்டைய ரோம் நாட்டில் வாழ்ந்த வர்ஜில் என்கிற மாபெரும் கவிஞர். அதாவது...’இதோ நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி, உண்ணுகிற அரிசி, அணிகிற செருப்பு, உறிஞ்சுகிற தேநீர்...இவற்றின் பின்னணியில் உள்ள கண்ணீர் உன் கண்களுக்குத் தெரிகிறதா?’ என்கிறார் கவிஞர்!

சரி ‘பரதேசி’ படத்தில் பல ஆச்சர்யங்கள் இருக்கின்றன, படத்தில் வில்லன் கிடையாது! அதாவது தமிழ் சினிமாவில் வருகிற வில்லன் கிடையாது. வருகிறவர்கள் காலத்தின் கட்டாயத்தால் கெட்டவர்களாக வாழ்பவர்கள். கொடூரங்களை பிரயோகிக்கும் கெட்டவர்களின் முகங்களை சரேலென்று காமிரா காட்டியவாறு நகரும்போது அவர்களிடம் தெரியும் இயலாமையையும், பரிதாபத்தையும் நம்மால் கவனிக்க முடியும். தேயிலைத் தோட்டங்களை பராமரிக்கும் வெள்ளைக்கார எஜமானன் கூட எங்கோ அந்நிய நாட்டில் இருக்கும் எவனுக்கோ கங்காணிதான். பண்டைய எகிப்து நாட்டில் பிரமிடுகள் கட்டுவதற்கான பெரும் கற்களை அடிமைகள் சரியாக தள்ளிக்கொண்டு வந்து அடுக்குகிறார்களா என்று ஃபாரோ மன்னனின் சார்பில் கையில் சவுக்கோடு கண்காணிக்கும் அதிகாரி மாதிரி தான்!

காடு, மலை, பசேலென்று பரந்து விரியும் தேயிலைத் தோட்டங்கள்...இதையெல்லாம் ‘அழகுணர்ச்சியோடு’ சுட்டிக்காட்டாமல் எச்சரிக்கையுடன் காமிரா தவிர்ப்பது கவனிக்கத்தக்கது. காதலர்கள் சந்திக்கும் பிக்னிக் ஸ்பாட் அவை அல்லவே!

Clichéக்களை குறைக்கலாமே தவிர, முழுசாகத் தவிர்க்க முடியாது போலிருக்கிறது!


மரத்துக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்க்கும் கதாநாயகி, ஹீரோவைப் பார்த்து ஒண்ணரைக்கண்ணோடு ‘அழகு’ காட்டுவது...’கோயிலுக்கு வந்து தாலி கட்டுறியா?’ என்று சைகையிலேயே அவனிடம் கேட்பது, வெள்ளைக்காரன் என்றாலே மதுபாட்டில்கள் சூழ ‘பாரி’ல் அமர்ந்து சுருட்டுப் பிடிப்பது, ‘They really get on my nerves’ என்று சீமாட்டி கோபப்படுவது, நாட்டுப்புறத்தனமே இல்லாமல் ‘செங்காடே’ என்று செதுக்கிய தமிழ் வார்த்தைகளுடன் பாடல், நிறைய இடங்களில் சத்தமான இசை அமைப்பு. (இயற்கைச் சூழ்நிலைகளில் ஏற்கனவே இசை உண்டு, நாம வேறு மெனக்கெட வேண்டாம்!) இறுதியில் பழைய ‘பாசமலர்’ கடைசி காட்சி மாதிரி டாப் ஆங்கிள் படப்பிடிப்பு......சரி, இதெல்லாம் பெரிய தப்புகள் ஒண்ணும் இல்ல, வுட்டுடலாம் நாயன்மாரே!




இறுதியில் தன் பெண்டாட்டியையும் குழந்தையையும் தொலைவில் பார்த்த விநாடியில் பரவச உணர்வு பளீரென கொந்தளிக்கத் துவங்க...மறு விநாடி ‘ஐயோ, அடிப் பாவி! கடைசியில் நீ இங்கு வந்தா தொலைக்க வேண்டும்?’ என்கிற கொடூரமான உண்மை மனதை ஒருசேர தாக்க, அந்த இளைஞன் ஓ’வென்று அலறியவாறு, அவளை நோக்கி ஓடுகிறானே – வசனமே இல்லாத அந்த சில நிமிடங்களில் குபுக்’கென்று இழையோடும் திரைக்கதை எனக்கு போதும்.

இப்படி பரந்து விரிந்த ‘தேயிலைத் தோட்டங்கள்’ இன்றளவும் ஏராளமாக நாடெங்கும் உண்டு. வடிவங்கள் தான் வெவ்வேறு! அவற்றையெல்லாம் சற்றே நின்று கவனிக்க கற்றுக் கொடுக்கும் திரைப்படம் ‘பரதேசி’.

‘என்னங்க நீங்க, அப்ப படம்னா விவரமா ஒரு கதையே தேவையில்லைங்குறீங்களா?!’ என்பீர்கள்.

நான் அப்படிச் சொல்லவில்லை.

உங்களாலும் பாலா மாதிரி ஒரு படத்தை போட்டுக் காட்ட முடியும் என்றால்...

தேவையில்லைதான்!